தமிழகம்

முதுகு குத்திகளின் முணுமுணுப்புகள் எங்கள் நிலைப்பாட்டை அசைக்காது: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தமிழகத்தின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நவ.30-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதா மீது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ‘‘இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறார்கள்.

அவர்களை 21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்” என்று கூறியிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழகம் மற்றும் தென்மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியதும், அகில இந்தியத் தலைவர்களை சென்னையில் ஒன்றிணைத்துக் கூட்டம் நடத்தியதும் திமுகதான்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தின் தற்போதைய பங்கான 7.18 சதவீதத்தி லிருந்து பிரதிநிதித்துவம் குறையக் கூடாது.

1971 மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரம் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மாற்றப்படக்கூடாது.

இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காக கொள்

கையை உதறிவிட்டு செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழகத்தின் நலனை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

இதற்கிடையே, திமுக எம்.பி.க் கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT