உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
மதுரை: “காதல் திருமணம் பங்குச் சந்தையை போன்றது, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு’ என வீட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்க வாலிபரை மணந்த திருச்சி இளம் பெண்ணுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை கூறினர்.
திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த இவர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மகள் மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் திருச்சி போலீஸில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து காணாமல் போன மகளை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி அவரது தந்தை கருப்பண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாயமான பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளம் பெண் காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார். நீதிபதிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண், நான் உடன் பணிபுரிந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர் நீதிபதிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் படிக்க வைக்கின்றனர். காதல் திருமணம் என்பது பங்குச் சந்தை போல, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு.
மனுதாரரின் மகள் விரும்பியவருடன் செல்வது தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில் பெற்றோர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பெண் நன்றாக படித்துள்ளார். பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் உங்களை நீதிமன்றத்தில் இப்படி காணொளி வழியாக பார்க்கச் செய்வதா?. காதலை எடுத்துச் சொல்லி பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம்.
பெற்றோர்களும் தற்போதைய காலகட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்திய நீதிபதிகள், இளம் பெண்ணிடம் கணவருடன் சென்று பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் எனவும் அறிவுரை கூறினார்.
அப்போது பெற்றோர் தரப்பில், “நாங்கள் வயதானவர்கள் எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று கூறி கண்ணீர் வடித்தனர். அதற்கு நீதிபதிகள், உங்கள் மகள் உரிய வயதை அடைந்து விட்டார். அவர் திருமணமாகி அவர் கணவருடன் சென்று விட்டார். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.” என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.