சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இதற்காகச் சென்னையில் பட் டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 17 வழித்தடங்கள், தாம்பரம் பகுதியிலிருந்து 4 வழித்தடங்கள், ஆவடி பகுதியிலிருந்து 5 வழித்தடங்கள் என மொத்தம் 26 வழித்தடங்கள் வழியாகச் சிலைகள் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன. சிலை கரைப்பு மையங்களுக்குச் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் ராட்சத கிரேன்கள் மூலம் சிலைகள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, டிராலிகள் வழியாகக் கடல் முனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குத் தயார் நிலையில் இருந்த, மஞ்சள் நிற சீருடை அணிந்த பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் சிலைகளைப் பெற்றுக்கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்று கரைத்தனர்.
சென்னையில் நேற்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.