தட்டாஞ்சாவடியில் வாக்குச்சாவடிக்கு முதலாவதாக வந்து வாக்களித்த 75 வயது மூதாட்டி அமுதா. (இடது)

 

படங்கள்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

தட்டாஞ்சாவடியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரலையில் கண்காணிப்பு

அழுக்கு சித்தர் கோயிலில் முதல்வர் சிறப்புப் பூஜை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இடைத்தேர்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரலையில் கண்காணிப்படுகிறது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி இன்று (அக்.6) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர். இதில் 350 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர்.

வாக்குப்பதிவு பணியில் அரசு ஊழியர்கள் 148 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் பொருட்டு இரு தினங்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள ஒஆர்எஸ் கரைசலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைகிறது. தட்டாஞ்சாவடியிலுள்ள 31 வாக்குசாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் போலீஸார் சேர்ந்து 1,330 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இங்கு மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. அதனால், இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் குலோத்துங்கன் கூறுகையில், “தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் தலா இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு நேரலையில் கண்காணிக்கப்படுகிறது

வாக்குப்பதிவு தொடர்பான புகார்களை, பொதுமக்கள் இணையவழி நேரலை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 0413-2299558, துணை தேர்தல் அதிகாரி 9443375089 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் உடன் நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

அழுக்கு சாமி (அழுக்கு சித்தர்) கோயிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்புப் பூஜை

முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை:

இடைத்தேர்தலில் வெல்ல வேட்டைக்காரன் புதூரில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

புதுச்சேரியில் பொதுத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்று முதல்வரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.

முதல்வர் சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உடையவர். அவரது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமியின் குருவான அழுக்குசாமி (அழுக்கு சித்தர்) ஆவார். இந்த சித்தர்களை முக்கியமான காரியத்தில் ஈடுபடும்போது சென்று சிறப்பு வழிபாடு செய்வது ரங்கசாமியின் வழக்கம்.

அதன் அடிப்படையில் இன்று தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்கு சாமி (அழுக்கு சித்தர்) கோயிலுக்கு சென்று என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் விவரங்களை பூஜைப் பொருட்கள் உடன் வைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தார். சிறப்புப் பூஜையிலும் ஈடுபட்டார் என்று முதல்வர் தரப்பில் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT