அண்ணாமலை
சென்னை: ‘உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்’ என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில், 1,100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 1,927 மருத்துவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 அன்று நடைபெற்றிருக்கிறது. இதன்பின்னர், உத்தேச பட்டியல், மார்ச் 11, 2026 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், விவரங்களும் வெளியிடப்படாமல், சுமார் 100 மருத்துவர்கள் மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, மொத்த பணியிடங்கள், 1,110 ல் இருந்து, 320 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காகத் தேர்வெழுதி காத்திருந்த இளம் மருத்துவர்கள், மிகுந்த குழப்பத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அரசு, மருத்துவர் பணியிடங்களிலும் அதே வேலையைக் காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது.
உடனடியாக, உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிக்காக, கடுமையாக உழைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது என்று திமுக அரசையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் வலியுறுத்துகிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.