சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.21, 22, 23 மற்றும் மே 4 ஆகிய 4 நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நாளான ஏப்.23-ம் தேதி, வாக்குப்பதிவு நிறைவடையும் அன்று மாலை 6 மணிக்கு முந்தைய 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் மாநிலத்தில் அமைதியை கடைபிடிக்கும் நோக்கில் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும், மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12(2)படி உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் உள்ளிட்ட அனைத்தும் ஏப். 21-ம் தேதி காலை 10 மணிமுதல், வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி என 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.