தமிழகம்

“ஜெயலலிதா போல் நாங்களும் வெகுண்டு எழுந்து வருவோம்” - அமைச்சர் கீர்த்தனா

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: "பொய் குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்க்கட்சிகள் எங்களை முடக்க நினைக்கின்றன. இப்படித்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முடக்க நினைத்தனர். ஜெயலலிதா வெகுண்டு எழுந்து வந்தது போல் நாங்களும் வருவோம்” என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் ஆணைகளை வழங்கி, தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார்.

அதன்பின் அமைச்சர் கீர்த்தனா அளித்த பேட்டி: வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சுய தொழில் தொடங்க உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். என்னை பற்றி விமர்சனம் செய்தால் நான் முடங்கி வீட்டில் இருந்து விடுவேன் என நினைக்கின்றனர். என் மீது உள்ள பயம் காரணமாக தொடர்ந்து விமர்சனம் செய்கின்றனர். ஆனால் என்னுடைய வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்துள்ளேன். ஹூண்டாய் நிறுவனம் தூத்துக்குடியில் வருகிறது என ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்கட்சிகள் தமிழகத்தை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. இப்படி தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை செய்தனர். ஜெயலலிதா வெகுண்டு எழுந்து வந்தது போல் நாங்களும் வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT