தமிழகம்

தீபத்தூணில் தீபம் ஏற்றலாமா? - உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை: திருப்பரங்குன்றத்தில் போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி / மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மதுரையில் கடந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. மேலும் ஆண்டுதோறும் திருக் கார்த்திகை நாளில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் ராம ரவிக்குமார், சிக்கந்தர் தர்கா தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் 2-வது நாள் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிடுகையில், ‘‘தர்கா அருகே உள்ள கல்தூண் தீபத்தூண் கிடையாது. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலங்களை அளவீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைக் கல்’’ என்றார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நில அளவீட்டுக் கற்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணும் இன்று வரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்தூண் பகுதிக்குச் செல்வதற்கான வழி தர்கா நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதா, இல்லையா?’’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘‘அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்கிறோம்’’ என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறினார். இந்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் கூறுங்கள்’’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘அந்த இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதுதான்’’ என்று தெரிவித்தார்.

அதன்பின்னர், சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீஃபா அகமதி, ‘‘மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின் காலம் வரையிலான ஆவணங்களில் தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 1862 முதல் 1923-ம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய வழிபாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான பகுதி, படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடியேற்றும் பகுதி ஆகியவை தர்காவுக்குச் சொந்தமானவை’’ என்றார்.

மேலும், கல் தூணுக்கும் தர்காவுக்கும் 20 மீட்டர் தொலைவுதான் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் எங்களது தரப்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ஹசீஃபா வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இடைக்கால உத்தரவு தொடர்பான வாதங்களை அனைத்து தரப்பினரும் சுருக்கமாக முன்வைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை இன்று (19-ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையில், கார்த்திகை தீபத்திருநாளுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்து அமைப்புகள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அடுத்தடுத்து போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி அறிவிக்கப்பட்டது. அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். எனினும் தடையை மீறி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு இந்து அமைப்பினர் நேற்று திரண்டனர்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காடேஸ்வரா சுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ராஜேஷ், சேவுகன், குற்றாலநாதன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாறன், மதுரை கோட்ட செயலாளர் அரசப்பாண்டி உட்பட ஏராளமானோரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தீர்ப்பு அளிக்கும் என முதலில் கூறப்பட்டது. இதனால் தீர்ப்பு சாதகமாக வந்தால் வெற்றி விழாவாக கொண்டாட இந்து முன்னணியினர் தயாராக இருந்தனர். எனினும் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று இடைக்கால தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. தீர்ப்பும், அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் எப்படி இருக்கும் என்ற பரபரப்பு காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மதுரை தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் மலையைச் சுற்றி தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT