சென்னை: தமிழகத்தில் வரும் பிப்.20, 21 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (பிப்.16) முதல் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 21-ம் தேதி லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வட தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
17-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.