மதுரை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சாய்வு தளப் பாதை மற்றும் மின்தூக்கி வசதி அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றங்கள் செயல்படுகின்றன. ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இருப்பினும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் நீதிமன்ற கட்டிடத்துக்கு செல்லும் வகையில் சாய்வு தளப் பாதை இல்லை. இதனால் நீதிமன்றங்களுக்கு செல்ல மாற்றுத் திறனாளிகள் சிரமப்பட வேண்டியதுள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் பயன்பாட்டுக்காக சாய்வு தளப் பாதை அமைக்கவும், மின் தூக்கி வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, “மனுத் தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சாய்வுதளப் பாதை மற்றும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதி ஏற்படுத்துவது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டார்.