சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: கொலை வழக்கில் விடுதலையான 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை, அவரது மகன் ரமேஷ் ஆகியோர் 2011 ஏப்.25-ல் ஒரு வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு, தென்றல் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தேவதாஸ், அம்புரோஸ், ரஞ்சன், வெங்கடேசன், மஞ்சுநாதன், கருணாநிதி, சூரியபிரகாஷ் மற்றும் ராஜா (எ) ராமன் ஆகியோர் திடீரென கத்தி, அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
பண விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது. இதில் ரமேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ஏழுமலை உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக 9 பேரையும் திருவண்ணாமலை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, அனைவரையும் விடுவித்தது. இதை எதிர்த்து காவல் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்தும், அதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் கொலைக் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, 9 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்மானித்து, அவர்களை விடுவித்த அமர்வு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். 9 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கிறோம். மேல்முறையீடு செய்ய 90 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.