புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து போலி மருந்துகள் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பரிந்துரைத்துள்ளார்.
புதுச்சேரியில் செயல்பட்ட 3 போலி மருந்து தொழிற்சாலைகள், 10 குடோன்களை கண்டறிந்து சீல் வைத்து, அதன் உரிமையாளர் ராஜா உட்பட 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் தயாரித்த மாத்திரைகள் 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப் பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மனு அளித்தன. பல சமூக அமைப்புகளும் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், ‘நாராயணசாமி ஆட்சியில்தான் இந்த போலி தொழிற்சாலைகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அதற்கு நாராயணசாமி, ‘நான் விசாரணைக்கு தயார்; போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் செல்வம் மற்றும் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு தயாரா?’ என்று
எதிர் கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழலில், இந்த விவகாரத்தை சிபிஐ, என்ஐஏ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பரிந்துரைத்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்று கருதி, இதுதொடர்பான விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.