சென்னை: தமிழகத்தில் வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், இனி உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருப்பது அவசியம்’ என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை, இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியவாறு வீடுகளுக்கே வந்து இடியாப்பம், வடைகறி விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது.
புகார்கள் அதிகரிப்பு: இந்நிலையில், சிலர், சுகாதாரமற்ற முறையிலும், சரியான முறையில் தயாரிக்காமலும் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொலைபேசி மூலமாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, பொது மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இடியாப்பம் விற்பனையை ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் தங்களது விவரங்களை, https://foscos.fssai.gov.in/ என்ற உணவு பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் சாலையோர வியாபாரிகள் என்ற கணக்கில் வருவதால், அவர்களுக்கு பதிவு உரிம கட்டணம் கிடையாது. அதேநேரம், இடியாப்பம் தயாரிப்பாளர் களுக்கு, ‘விற்று கொள்முதல்’ அடிப்படையில் பதிவு உரிமத்துக்கான கட்டணம் இருக்கும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை விற்பனை நடைபெற்றால், ரூ.3,000 வரை உரிமம் கட்டணம் இருக்கும். அதற்கு குறைவாக விற்பனை நடந்தால், ஆண்டுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
விற்பனையாளருக்கு அறிவுறுத்தல்: இடியாப்பம் தயாரிப்ப வர்கள், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்க வேண்டும். அதேபோல், இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் காய்ச்சல், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், விற்பனையில் ஈடுபடக்கூடாது. ஜனவரி மாதம் முதல் இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.