சென்னை: “யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்” என மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்டோபர் 15 முதல் ரூபாய் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்பொழுதும் போல இலவசமாக வழங்கப்படும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
வர்த்தகர்களுக்கு மட்டுமே இக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் கூட, ரயில்வே, தொலை தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரிமியம், மின்சாரம், தண்ணீர் பயன்பாடு போன்றவற்றிற்கான கட்டணங்களுக்கு, அக்கட்டணம் ரூபாய் 2,000-க்கு மேல் இருந்தால், அதற்கு ரூபாய் 5 நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இக்கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இக்கட்டண வசூல் பொதுமக்களை நேரடியாக கடுமையாக பாதிக்கும். வர்த்தகத்திற்கு யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை நடைமுறை படுத்தினால், அந்தக் கட்டணச் செலவும், பொருட்களின் மீதே ஏற்றப்படும். அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது, இச்சேவையை வழங்கி வரும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்குமே, நிதி மூலதனத்திற்குமே சாதகமானதாகும். அவற்றின் லாப வேட்கைக்கு இரை போடுவதாகவே அமையும்.
மத்திய பாஜக அரசு இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதும், சாதாரண மக்களுக்கு எதிராக செயல்படுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.