சென்னை: குரூப்-1 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் ஏழை, எளிய இளைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
இதில் துணை ஆட்சியர், உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் நடப்பாண்டு குரூப்-1 தேர்வுக்கு கடந்த காலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாக 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அரசாக தவெக செயல்படும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்புவோம்’ என்ற வாக்குறுதிக்கு இது நேர்மாறானது.
எனவே தமிழக அரசு குரூப்-1 காலிப்பணியிடங்களை 200 ஆக அதிகரித்து தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.