கோப்புப் படம்
மதுரை: தமிழகத்தில் குவாரி நடத்துவோரிடம் பசுமை நிதி வசூலிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் நாராயண பெருமாள்சாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு தொழிற்துறை கடந்த 23.02.2022-ல் வெளியிட்ட அரசாணை மற்றும் சிறு கனிம விதிகள் திருத்தம் ஆகியன ‘பசுமை நிதி’ என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் கட்டாய நிதி வசூல் செய்ய அனுமதிக்கிறது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, திலீப்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்டத் திருத்தம் மேற்கொள்ள சிறு கனிமங்கள் விதிகள்-1959 பிரிவுகளின்படி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பசுமை நிதியைப் பயன்படுத்தி குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. சுற்றுச்சூழல் சமன்பாட்டைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. மறு வாழ்வளித்தல், மீட்டெடுத்தல், மறு சீரமைப்பு என்ற விதிகளின் அடிப்படையில் அரசு செயல்பட வேண்டியுள்ளது.
எனவே, இதற்கான பங்களிப்பை வரியாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிதி கைவிடப்பட்ட குவாரிகளைச் சீரமைக்க பயன்படுத்தப்படும்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை நிதியம் அமைக்க விதி வழிவகை செய்கிறது. விதிப்படி ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மறு வாழ்வளித்தல், மீட்டெடுத்தல் மற்றும் மறு சீரமைப்பு விதியை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்திருத்தம் சட்டம் வழங்கியுள்ள தொழில் உரிமையை மறுக்கவில்லை. மாறாக தொழில் செய்வதற்கு சில நியாயமான கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மாவட்ட கனிம நிதியத்துக்கும், இந்தப் பசுமை நிதியத்துக்கும் வேறுபாடு உள்ளது. எனவே, சிறு கனிமங்கள் விதிகள், 1959-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தப் பிரிவுகள் 35-யு மற்றும் 35-எச் ஆகியன செல்லுபடியாகும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.