சென்னை: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், ‘‘ஆடவருக்கான ஐசிசி டி-20 உலகக் கோப்பையை அபாரமாக வென்றுள்ள இந்திய அணியினருக்கு பாராட்டுகள். கடைசி 3 போட்டிகளிலும் மிகுந்த உறுதியோடும் அமைதியோடும் ‘சேட்டன்' சஞ்சு சாம்சன் விளையாடி, அணியின் வெற்றிக்குப் பங்காற்றியிருக்கிறார். தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய அணி 3-வது முறையாக டி-20 உலகக் கோப்பையை வென்ற பெருமை மிகு தருணத்துக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி: சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்ற பெருமைமிக்க தருணத்தை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மறக்கமுடியாத வெற்றி.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அமைதி, திறமை மற்றும் கூட்டு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெற்றி. பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா ஆகியோருக்கு பாராட்டுகள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இந்த மகத்தான வெற்றி இந்திய இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. இதே உற்சாகத்துடன் எதிர்காலத்திலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: மீண்டும் ஒருமுறை, நாட்டுக்கு பெருமை சேர்த்ததற்கும், இந்திய மூவர்ணக் கொடியை பெருமையுடன் பறக்கச்செய்ததற்கும் சாம்பியன் களுக்கு வாழ்த்துகள்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் உண்மையான சாம்பியன்களைப் போல விளையாடி, போட்டி முழுவதும் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையை வெளிப்படுத்தினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.