தமிழகம்

மயிலாடுதுறை தொகுதியை ‘மறந்த’ தலைவர்கள் - பின்புலம் என்ன?

என்.செல்வக்குமார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், எந்தக் கட்சித் தலைவரும் இதுவரை இங்கு பிரச்சாரத்துக்கு வராததால், இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில், 1991-க்கு பிறகு இந்தத் தொகுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இதுவரை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே தாரை வார்த்துள்ளன.

கடந்த 2016 தேர்தலின் போதுதான் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டன. இதில், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். அதன்பிறகுதான் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டது. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின், கடந்த 2021 தேர்தலில் இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கும் ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வெற்றி பெற்றார்.

அதேபோல, இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிஸுசுக்கு ஒதுக்கப்பட்டு ஜமால் முகமது யூனூசும், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு பழனிச்சாமியும் களம் காண்கின்றனர்.

ஆனால், மாவட்டத் தலைநகரான இந்தத் தொகுதிக்கு திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்களோ, கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களோ இதுவரை பிரச்சாரத்துக்கு வராததால், இக்கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சட்டநாதபுரத்தில் கடந்த 7-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல, பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார் கோவிலில் அதிமுக சார்பில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

ஆனால், இருவரும் மயிலாடுதுறைக்கு வந்து பிரச்சாரம் செய்ய வரவில்லை. அதேபோல, துணை முதல்வர் உதயநிதி பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மங்கைநல்லூரில் திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து பேசிவிட்டு, மயிலாடுதுறை தொகுதி வழியாக சென்றும்கூட, காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யவில்லை.

இவர்கள் தான் இப்படி என்றால், பாமக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணியோ, காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூசை ஆதரித்து அக்கட்சியின் முக்கியத் தலைவர்களோ யாரும் இதுவரை மயிலாடுதுறைக்கு பிரச்சாரத்துக்கு வரவில்லை.

இதனால், அக்கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் மட்டுமே நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.

மற்றபடி வேறு எந்தக் கட்சியின் பெரிய தலைவர்களோ, 2-ம் கட்டத் தலைவர்களோ மயிலாடுதுறை தொகுதிக்கு இதுவரை பிரச்சாரம் செய்ய தலைகாட்டாததால் இத்தொகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT