தமிழகம்

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கர்நாடகா மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசியல் கட்சி தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டு அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதிசெய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை காட்டுகிறது.

          

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக அரசு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உதவும் வகையில் செயல்பட நினைத்தால் அது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகமாகும். மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல்ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்திட வேண்டும்.

தவாக தலைவர் தி.வேல்முருகன்: தமிழகத்தில் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில், காவிரி நீரை மேலே சேமித்து வைக்கும் வகையிலான எந்தத் திட்டமும், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் என்பதை கர்நாடக அரசு புரிந்துகொள்ளவேண்டும். மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக, சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்தி, கடுமையான சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT