சென்னை: எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, தம்பிதுரை எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து, “பொய்யான வாக்குறுதிகள் தந்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் நீட்டுக்கு விலக்கில்லை. மக்களின் கேள்விகளுக்கு பதில் இல்லை. எனவே போட்டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம். எதிரிகளும், துரோகிகளும் தீட்டும் திட்டங்கள் பலிக்காது. இரட்டை இலையை தாங்கும் தொண்டர் படையோடு அதிமுக ஆட்சியை அமைத்து கோட்டையிலே கொடியேற்றுவோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிறகு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்ஜிஆர் மக்களுக்காக செய்த பணிகளையும் நினைவு கூர்ந்தார். அவரைத் தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், வி.கே.சசிகலா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினர்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் அங்கு மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன்கள், பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழக அரசியல்வரலாற்றின் பொற்கால அத்தியாயம் எம்ஜிஆர். அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக்காடாக மாற்ற துடித்தபோது, அதிமுகவை தொடங்கி அண்ணா வின் விழுமியங்களை காத்தவர். அவரின் புகழை ஏந்தி நிற்கும் நாம், திமுகவின் ஆட்சிக்கு மக்கள் துணையோடு முடிவுரை எழுத உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தன்னுடைய திட்டங்களால் பசியை பொசுக்கி, கல்வி, சுகாதாரத்தில் மாபெரும் புரட்சி செய்தவர் எம்ஜிஆர். அவரது புகழ் காலம் கடந்தும் மங்காது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழகத்தை தன்னிறைவுபெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய எம்ஜிஆரின் பாதையில் எந்நாளும் பயணிக்கஉறுதியேற்போம்.