தமிழகம்

‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ - அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

குள.சண்முகசுந்தரம்

தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்” என அதி​முக ஐடி விங் மாநிலச் செய​லா​ளர் ராஜ் சத்​யன் போட்ட பதிவு அதி​முக வட்​டாரத்​தில் பேசுபொருளாகி இருக்​கிறது.

தனது பதி​வில், அதி​முக இரண்​டு​பட்டு நிற்க காரண​மானவர்​களை​யும் சாடி இருந்த ராஜ் சத்​யன், என்ன காரணத்​தி​னாலோ சில மணி நேரத்​திலேயே தனது பதிவை நீக்​கி​விட்​டார். இதுகுறித்து அவரை நாம் தொடர்பு கொண்​ட​போது, “கட்சி மீண்டும் செல்​வாக்​கான நிலைக்கு வரவேண்​டும் என்​ப​தற்​காக அந்​தப் பதிவை போட்​டேன். மற்​றபடி யார் மீதும் பழிசொல்​வது நோக்கமில்​லை” என்று முடித்​துக் கொண்​டார்.

இது விஷய​மாக நம்​மிடம் பேசிய ஐடி விங் பொறுப்​பாளர்​களோ, “ஜெயலலிதா காலத்​தில் யாரும் தனிக்​காட்டு ராஜா​வாக ஆட்​டம்​போட முடி​யாது. அப்​படி ஆட்​டம் போட்ட சிலரை அட்​ரஸே இல்​லாமல் செய்​தவர் ஜெயலலி​தா.

ஆனால், இப்​போது அப்​படி இல்​லை. பழனி​சாமி கட்​சிக்கு விசு​வாச​மான அனை​வரை​யும் அரவணைத்து கட்​சியை கொண்டு செலுத்த நினைக்​கிறார். ஆனால், மாவட்ட பொறுப்​பாளர்​களில் பெரும்​பகு​தி​யினர் குறுநில மன்​னர்​கள் போல் செயல்​படு​கிறார்​கள். அதனால் கட்​சிக்​குள் புதி​ய​வர்​களின் வரு​கையே கிட்​டத்​தட்ட இல்​லாமல் போய்​விட்​டது.

முன்​னாள் அமைச்​சர்​கள் உதயகு​மார், வேலுமணி, விஜய​பாஸ்​கர் போன்​றவர்​கள் எல்​லாம் 20 வயதில் கட்​சிக்​குள் வந்​தவர்​கள். ஆனால், இன்​றைக்கு அப்​படி யார் வரு​கிறார்​கள்? இளைஞர் களுக்​காகவே ஆரம்​பிக்​கப்​பட்ட இளைஞர் - இளம்​பெண்​கள் பாசறை​யிலேயே ஐம்​பது வயதைக் கடந்​தவர்​கள் தான் உறுப்​பினர்​களாக இருக்​கிறார்​கள்.

புதி​தாக தொடங்​கப்​பட்ட விளை​யாட்டு அணிக்கு மாநிலச் செய​லா​ளரே இல்​லை. கட்​சி​யில் இருக்​கும் 82 மாவட்​டச் செய​லா​ளர்​களில் 10 பேர் கூட இளைஞர்​கள் இருக்க மாட்​டார்​கள். தற்​சம​யம் கட்​சி​யில் 20 சதவீதம் பேர் இளைஞர்​கள் இருக்​கிறார்​கள். அவர்​களுக்​கெல்​லாம் பொறுப்​பு​களைக் கொடுத்து செயல்​பட​விட்​டால் தான் அவர்​கள் இன்​னும் 20 சதவீதம் இளம் சகாக்​களை உள்ளே கொண்டு வரு​வார்​கள்.

தவெக-வுக்கு எவ்​வித கட்​டமைப்​பும் இல்​லை. ஆனால், கட்​டுக்​கடங்​காத இளைஞர் கூட்​டம் அங்கே இருக்​கிறது. தேர்​தல் சமயத்​தில் வாக்​குச் சாவடிக்கு வெளி​யில் இருந்த பூத்​களில் அதி​முக பூத்​களில் 60 வயதைக் கடந்​தவர்​கள் தான் தூங்​கிக் கொண்​டிருந்​தார்​கள். தவெக பூத்​களில் இளைஞர்​கள் டேபிள் மீது ஏறிக் குதித்​துக் கொண்டு இருந்​தார்​கள். இந்த எனர்​ஜியே அந்​தக் கட்​சிக்கு 5 சதவீத வாக்​கு​களைக் கொண்டு வந்து சேர்த்​தது.

அதி​முக-வை பொறுத்​தவரை முன்​னாள் அமைச்​சர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள் பலரும் புதி​ய​வர்​களின் வளர்ச்​சியை அவ்​வள​வாய் விரும்​புவ​தில்​லை. இன்​றைக்கு அதி​முக ஐடி விங் ஒழுங்​காக வேலை செய்​ய​வில்லை என்​கிறார்​கள். ஆனால், தேர்​தலுக்கு முன்​பு, பழனி​சாமி கொடுத்த சில வேலைகளை செய்து முடிக்க மாவட்ட அளவில் எந்த ஒத்​துழைப்​பும் இல்​லை.

பிறகெப்​படி ஐடி விங் வேலை செய்​யும்? அமைச்​சர் பதவிக்கு ஆசைப்​பட்டு இன்​றைக்கு கட்​சிக்​குள் சண்டை போடு​கிறார்​கள். ஜெயித்​தவர்​கள் மட்​டும் தான் அதி​முக​வா? இதற்கு முன்​பு, மற்ற கட்​சிகளை திட்​டு​வோம். கடந்த பத்து வருடங்​களாக எங்​களோடு இருந்​தவர்​களை திட்​டவே எங்​களுக்கு நேரம் போத​வில்​லை. முன்​பு, ஓபிஎஸ், சசிகலாவை திட்​டினோம். பிறகு, செங்​கோட்​டையனை திட்​டினோம். இப்​போது சி.​வி.சண்​முகத்​தை​யும் சி.​விஜய​பாஸ்​கரை​யும் திட்​டிக் கொண்​டிருக்​கிறோம்.

ரீல்ஸ் போட்டு ஏதோ ஒரு தேர்​தலில் ஜெயித்​து​விட்​டார்​கள் என்​ப​தற்​காக நாமும் இப்​போது அந்த வழிக்​குப் போக வேண்​டிய​தில்​லை. ஜெயலலி​தாவுக்கு எதி​ராக தீர்ப்பு வந்த சமயத்​தில் மதுரைக்​காரர்​கள் விமானத்​தையே மறித்​தார்​கள். மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் மீது அவர் திருச்சி விமான நிலை​யத்தை விட்டு வெளி​யில் வரமுடி​யாத​படிக்கு தாக்​குதல் நடத்​தி​னார்​கள். உணர்​வுமிக்க அந்​தக் கூட்​டத்தை எல்​லாம் இப்​போது தொலைத்​து​விட்டு நிற்​கிறது அதி​முக. அதனால் தலை​மைக் கழகம் ஏதாவது போராட்​டம் அறி​வித்​தால் ஓரமாய் நின்று கோஷம் போட்​டு​விட்​டுப் போகிறார்​கள். அதற்​குள்​ளாகவே அந்​தக் கூட்​டத்​தில் இருக்​கும் பலருக்கு தலை சுற்​றல் வந்து மயங்​கி​விடு​கிறார்​கள்.

மேகே​தாட்டு பிரச்​சினைக்​காக பி.ஆர்​.​ பாண்​டியன் ஆட்​களை திரட்​டிக் கொண்டு கர்​நாடகா​வுக்​குப் போகிறார். நியாய​மாகப் பார்த்​தால் இந்​தப் பிரச்​சினையை அதி​முக கையில் எடுத்​திருக்க வேண்​டும். ஏனென்​றால், பெயரளவுக்​குத்​தான் இன்​றைக்கு திமுக எதிர்க்​கட்​சி. கூட்​ட​ணிக் கட்​சிகள் எல்​லாமே அந்​தக் கட்​சியை கைகழு​வி​விட்​டன. அதனால் உண்​மை​யான எதிர்க்​கட்சி அதி​முக தான். மக்​கள் பிரச்​சினை​களை கையிலெடுத்து ஆங்​காங்கே அதி​முக-​வினர் போராட்​டங்​களை முன்​னெடுத்​தால் தான் உள்​ளாட்​சித் தேர்​தலுக்கு தொண்​டர்​களை தயார்​படுத்த முடி​யும். இல்​லா​விட்​டால் எஞ்சி இருக்​கும் அதி​முக-​வினரும் தவெக-வை நோக்​கிப் புறப்​படு​வதை யாராலும் தடுத்து நிறுத்த முடி​யாது” என்​றனர்.

யானை​கள் மோதும்​போது புற்​கள் மிதிபடு​கின்​றனவே என யாரும் கவலைப்​படு​வ​தில்​லை. அதி​முக-​வில் பதவிக்​காக சிலபேர் இப்​போது அப்​படித்​தான் கவலை இல்​லாமல் இருக்​கிறார்​கள்​. அடுத்​து என்​ன நடக்​கிறது என்​று பொறுத்​திருந்​து ​பார்​க்​கலாம்​.

SCROLL FOR NEXT