மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.
படம்: நா. தங்கரத்தினம்
பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
முதல்வர் விஜய்: தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறிய செய்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பொங்கல், புத்தாண்டு என பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடு தான் தமிழர்களுக்கு தொடங்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான். மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப்போன பாப்பையா நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. தனது அரும்புதல்வர்களுள் ஒருவரை தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களை சிரிக்க வைத்ததுடன், தமிழ் மொழியின் பெருமையையும் நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கும், பட்டிமன்ற துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் தலைமுறைகளை மகிழ்வித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு செய்தி மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகுக்கே பேரிழப்பாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: பட்டிமன்றங்களில் நடுவராக மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் ஆழமான, அறிவுப்பூர்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். திருக்குறளுக்கு உரை எழுதியவர். சாலமன் பாப்பையாவின் இழப்பு தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.
பாமக தலைவர் அன்புமணி: உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்து தமிழ்க் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சாலமன் பாப்பையாவின் மறைவு செய்தி துன்ப இடியாக என்னை தாக்கியது. 65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்துக்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவர். அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை கலந்த தமிழ் நடை என பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும், தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமான செய்தி வேதனை அளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ் பட்டிமன்றத்தை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர். அவர் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கும் பட்டிமன்ற கலைக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் எம்பி சு.திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.