சென்னை: அமைச்சர் நிர்மல்குமார் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆ.ராசா வருத்தம் தெரிவித்து, வார்த்தைகளை திரும்பப் பெற்றார்.
முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆ.ராசா முதல்வர் விஜய்யையும், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை பதிவிட்டு தனது மறைமுக அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்: ஊழல் மற்றும் பொய்கள் குறித்து கேள்வி எழும்போதெல்லாம் ஆபாச பேச்சை கையில் எடுப்பதுதான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது. தவெகவை எதிர்கொள்ள திராணியின்றி நடத்தும் இந்த ஆபாச நாடகங்களுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: மக்கள் தீர்ப்பை மதிக்காமல் பொது மேடைகளில் முதல்வரை ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் என திமுக இன்று தனது நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக்கொண்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: திமுகவினர் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை அந்தந்த கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்.
இதற்கிடையே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஆ.ராசா வெளியிட்ட விளக்கத்தில், “அவ்வாறு பேசியது எனக்கும் வருத்தம் தான். என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்கு தயக்கமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.