சென்னை: ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது. குணமும் இருக்கிறது. ஆனால், சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல், கலவரங்களில் ஈடுபடுவது, அதுவும், பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் எவராலும் ஏற்க முடியாது. மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 74% அதிகரித்துள்ளதாக சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. நாட்டு மக்களை பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சில மாநிலங்களில் மதவாத கும்பல்கள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைச் சீர்குலைத்துள்ள சம்பவங்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் பேராபத்தாகும்.
மதவாத கும்பல்களின் இந்த வன்முறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் அச்சமின்றி, பாதுகாப்புடன் தங்கள் பண்டிகைகளை கொண்டாட மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களை யும், கிறிஸ்தவ மக்களையும் தாக்கிய இந்துத்துவ வெறிக்கும்பலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.