மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் 2014-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அண்மையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை அடுத்து திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, ‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்தி பேசி வருபவர்களை கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன்பு மதுரை மாவட்ட மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்... 2014 தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றம் வழக்கில் 2014, 2017-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சமூக நல்லிணக்கம் அமைதியை நிலைநாட்டும் வகையில் வழங்கிய தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்துவதாக கூறியே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால், நாங்கள் எந்த நீதிபதிக்கு ஆதரவாகவும், எந்த நீதிபதிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் எனக் கூறி தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். திருப்பரங்குன்றம் வழக்கில் கடந்த கால தீர்ப்புகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.