மதுரை: கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்த லைபீரிய கப்பல் மூழ்கியதால் பல்வேறு கரையோர மாவட்ட கடற்கரைகளில் படிந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: விழிஞ்சம் துறைமுகத்தில் கடந்த 2025 மே 25-ல் லைபீரிய நாட்டின் எல்சா-3 என்ற கப்பல் மூழ்கியது.
மூக்கிய கப்பலில் 643 கன்டெய்னர்களில் 1,400 டன் பிளாஸ்டிக் நர்ட்டல்ஸ், 450 டன் எரிபொருள் எண்ணெய் மற்றும் கால்சியம் கார்பைடு ஹைட்ராக்சின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருந்துள்ளன.
இதன் விளைவாக தற்போது கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் படிந்துள்ளன. இதனால் கடல் நீர் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்து நிவாரண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கேரள அரசு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் ரூ.9,531 கோடி இழப்பீடு கோரியுள்ளது.
எனவே, லைபீரிய கப்பல் கவிழ்ந்ததால் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கிடவும், கடற்கரை பகுதியில் படிந்துள்ள எண்ணெய், பிளாஸ்டிக் துகள்களை அகற்றவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
கப்பல் உரிமையாளரிடமிருந்து இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 29-க்கு தள்ளிவைத்தனர்.