தமிழகம்

17 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள்: சட்டத்துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தரும் வகையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் போதை மருந்துகள் மற்றும் மன மயக்கம் பொருட்கள் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்கள், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 500 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகம் ரூ.48.76 கோடியில் அமைக்கப்படும். சென்னை மத்திய சிறை-1-ல் ஐடிஐ ரூ.8 கோடியில் அமைக்கப்படும். சிறைகளில் பணியாற்றும் மனநல ஆலோசகர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் சமையலறைகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் ரூ.21 கோடி ஒதுக்கப்படும்.

சேலம், நாமக்கல், தேனி மற்றும் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டு முதல்புதிதாக முதுநிலை பட்டப்படிப்பு (எல்எல்எம்) தொடங்கப்படும். இதற்காக, ஒரு கல்லூரிக்கு 2 இணை பேராசிரியர் வீதம் 8 இணை பேராசிரியர் பணியிடங் கள் தோற்றுவிக்கப்படும்.

வேலூர், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் மாணவர் விடுதி கட்டிடம் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 12 அரசு சட்டக்கல்லூரிகளில் தலா 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT