தமிழகம்

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளில் குவிந்த வேட்பாளர்கள்

நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுவையில், வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் குவிந்தனர். இதனால் நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தேர்தல் உடனடியாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இண்டியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு ஏற்படவில்லை.

முதல் 2 நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடந்த 18-ம் தேதி அமாவாசை என்பதால் அன்றைய தினத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாவிட்டாலும், காங்கிரஸ், திமுக கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். கடந்த 20-ம் தேதி முதல்வர் ரங்கசாமி உட்பட பல்வேறு வேட்பாளர்கள் சார்பில் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

          

இதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 10, அதிமுகவுக்கு 2, லஜகவுக்கு 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.

இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனாலும், இண்டியா கூட்டணியில், தொகுதி பங்கீடு முடிந்து பிற்பகல் 3 மணி வரை அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையொட்டி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடனும், கட்சி கொடிகளுடனும் ஊர்வலமாக சென்றதால், புதுவை நகர்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யும் 17 அரசு அலுவலகங்கள் முன்பும் துணை ராணுவ படையினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT