“தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகனை வேண்டிக்கொண்டதாக பாஜக எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவரது லெட்டர் பேடில் வெளியிடுவதாகச் சொல்லும் முதல்வர் ஸ்டாலின், அவருடைய கூட்டணி கட்சிகளுக்கு இப்படித் தான் எழுதிக் கொடுக்கிறாரா?” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து நாட்டில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டினேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் என வேண்டினேன். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற முருக பக்தர்கள் கடந்த 45 ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. தமிழகத்தில் அராஜகம் நடைபெறுகிறது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதில் முதல்வர் ஸ்டாலின் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு வருகிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது கேலிகூத்தாக உள்ளது. இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
திமுக-வை வீட்டுக்கு அனுப்ப இன்னும் 2 மாதங்களே உள்ளன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. திருமாவளவன் பாஜக கூட்டணியில் எம்எல்ஏ ஆனவர். இன்று திமுக கூட்டணியில் உள்ளார். மனசாட்சி வழி தான் பேசுகிறோமா என்பதை அவர் மனதை தொட்டுச் சொல்ல வேண்டும். தீபம் ஏற்றப் போராடிய பாஜக மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இதை திருமாவளவன் கண்டிக்கவில்லை. மாற்று மதமாக இருந்தால் கேட்டிருப்பார். கடவுளிடம் விளையாடியவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
ஆர்எஸ்எஸ் நூறாண்டுகள் கடந்து மக்கள் சேவையாற்றும் சிறப்பான அமைப்பு. ஆர்எஸ்எஸ் போல் எந்த அமைப்பும் சேவையாற்றியது இல்லை. அப்படிப்பட்ட அமைப்பை அல்கொய்தா உடன் ஒப்பிட்டு காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் பேசியதைக் கண்டிக்கிறேன். பாஜக எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவரது லெட்டர் பேடில் வெளியிடுவதாக தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் அவருடைய கூட்டணி கட்சிகளுக்கு இப்படித் தான் எழுதிக் கொடுக்கிறாரா எனக் கேட்கிறேன்.
கடவுள் முருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார். “முருகன் என் கூடத் தான் இருக்கிறார், திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய அநீதி இழைத்திருக்கிறேன், அதனால் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலினை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.