தமிழகம்

உயர் கல்வியை வணிக மயமாக்கும் ‘தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா’வை நிறுத்துக: கோ.வி.செழியன்

செய்திப்பிரிவு

சென்னை: “உயர் கல்வியை வணிகமயமாக்கும் ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்” என்று முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (செப்.8) நிறைவேற்றப்பட்டிருக்கும் ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா - 2026’-க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நேற்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா’வில், ‘தனியார் பல்கலைக்கழகம்’ அமைக்க சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சென்னை தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வேண்டும் என்றும், நிரந்தர அறக்கட்டளை நிதியாக (Permanent Endowment Fund) ரூ.50 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் இருந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம், 2019-ஐ அவசர அவசரமாக தவெக அரசு கூட்டத் தொடரின் கடைசி நாளில் திருத்தி நிறைவேற்றி இருக்கிறது.

உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்று முடிந்துவிட்டது. 15 நாட்கள் கழித்து இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன்?

சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த 100 ஏக்கரை 12 ஏக்கர் என அதிரடியாக இந்தத் திருத்தம் மூலம் குறைத்திருப்பது யாருக்காக?

இதுதவிர, மற்ற நகராட்சி எல்லைகள் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்ததை, நகராட்சி எல்லைக்குள் 18 ஏக்கராகவும், கிராமப்புறங்களில் 25 ஏக்கராகவும் குறைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?

இப்படி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் செலுத்த வேண்டிய நிரந்தர அறக்கட்டளை வைப்புநிதி ரூ.50 கோடியை, ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி குறைக்கப்பட்ட ரூ.25 கோடி சலுகை, ஏற்கெனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என ‘பின்தேதியிட்ட சலுகை’ ஏன் வழங்கப்படுகிறது?

தனியார் பல்கலைக்கழகம் ஒருவேளை திவாலானால், அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தான் இந்த நிரந்தர அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

அதைச் சரிபாதியாகக் குறைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தவெக அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் ஏன் உலை வைக்க வேண்டும்?

‘கஜானா காலி’ எனக் கூறி மின்கட்டணம், சொத்து வரி என மக்கள் தலையில் வரி  சுமையைத் தூக்கி வைக்க முயற்சிக்கும் தவெக அரசு, பெற்றோரிடம் அதீத கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் திட்டமிட்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது?

புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் ‘தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து’ கேட்டுப் பெற்று, புற்றீசல் போல் எங்கு பார்த்தாலும் தனியார் பல்கலைக்கழகம் என்ற சூழல் உருவானால், அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்ன ஆவது?

ஏற்கெனவே திமுக ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்து, அதை நிறைவேற்ற முனைந்தபோது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அந்த முயற்சியை அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது கைவிட உத்தரவிட்டார்.

ஆனால், இன்றைக்கோ புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு, உயர் கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து, சமூக நீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது?

எனவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், இப்படிப் புதிய ‘தளர்வுக் கொள்கை’ அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர் கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, 2026-ஐ தவெக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT