தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறுவை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உர மானியம், இடுபொருட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதற்காக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், விவசாயிகள் வரிசை நடவு செய்திருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி விவசாயிகளும் இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீது, கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்த திட்டத்துக்கு நிதியை ஒதுக்கீடு செய்து கடந்த 12.6.2026 அன்று தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.
இதற்கிடையே, குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த மாதம் முதல் அறுவடையைத் தொடங்க உள்ளனர். ஆனால் குறுவை தொகுப்பு நிதியை இன்னும் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து காவிரி உரிமை விவசாயிகள் செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, “குறுவை தொகுப்பு திட்டம் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு,அரசாணையும் வெளியிடப்பட்டது.
குறுவை தொகுப்பு திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கி விட்டதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். ஆனால், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த திட்டத்துக்கான நிதி வரவு வைக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை தொடங்கி விடும். ஆனால் நிதி மட்டும் இதுவரை வரவில்லை. எனவே நிதியை உடனே விடுவிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான நிதி வங்கி மூலம் வரவு வைக்கப்படும்” என்றனர்.