கிருஷ்ணசாமி
சென்னை: “தமிழகத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது” என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “விஜய் அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் நிறைவடைய உள்ளன. பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி போன்ற எண்ணற்ற வரக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல், முதல்வர் வரை நிர்வாக அனுபவமின்மை, அரசின் பல செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது. தினசரி நடைபெறக்கூடிய கொலைச் சம்பவங்கள், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், மக்களின் போராட்டங்கள் ஒருபுறம்; மறுபுறம் தொடர் மின்வெட்டு, சிறுகுறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் சுய மின் உற்பத்தி மூலம் மட்டுமே செயல்படும் அவல நிலை என ஒட்டுமொத்தத்தில் எல்லா குறைபாடுகளும் ஒருங்கிணைந்து, பொருளாதார வளர்ச்சியை முடக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஒரு சதவீதமும், செப்டம்பரில் 5 சதவீதமும் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் பல மாநிலங்களில் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்படியே போனால், மிகப்பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்புகளும் பறிபோகக் கூடும்.
தமிழகத்தில் வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே பிற வருவாய்களும் தானாகவே குறையும். எனவே, தமிழகத்தில் அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்களை விரைவில் நாம் எதிர்கொள்ள நேரிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.