கிருஷ்ணசாமி
பழனிசாமி பாஜக-வை மட்டுமே நம்பிக் கொண்டு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அவர்கள் எங்களை மதிக்கவில்லை; புறக்கணித்து உதாசீனப்படுத்துகின்றனர். பழனிசாமி பாஜக-வை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கிறார்.
அமித் ஷா, தன்னை தூக்கிக் கொண்டு போய், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்துவிடுவார் என்று நினைக்கிறார். இதனால் அதிமுக, பாஜக அடங்கிய கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி வெகுதூரம் வந்துவிட்டோம். இனிமேல் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகள் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக. பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்பதற்காக இல்லை. தென் மாவட்டங்களில் அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. 50, 60 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலையில் இருக்கிறது. எனவே, நாங்கள் இந்தத் தேர்தலில் 60, 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, 10 அல்லது 12 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.