கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

 
தமிழகம்

மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கிருஷ்ணசாமி கோரிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டு எனும் இடத்தில் அணை கட்டுவதால் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆதாரம் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை நாமும் வரவேற்றோம். எனினும், இப்பிரச்சனையை இதோடு விட்டுவிட்டால் அதற்கு நிரந்தர தீர்வை எட்ட முடியாது.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த கணமே, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, தமிழகத்தின் தீர்மானம் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்தாது என அறிவித்துள்ளார்.

எனவே, விரைவாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேளாண்மை அமைப்புகள் உள்ளடங்கிய கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு, அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மேகேதாட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஒரு வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT