கிருஷ்ணசாமி |  கோப்புப் படம்

 
தமிழகம்

“கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத்தை எடுக்க விடமாட்டோம்” - கிருஷ்ணசாமி

செய்திப்பிரிவு

கோவை: கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் சூட்டி இருக்கிறார். 2003-ல் இதே பெயரை வைத்தபோது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்தத் தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று ‘சண்டியர்’ படப் பெயரை கமல்ஹாசன் கைவிட்டார்.

இப்போது 23 வருடங்கள் கழித்து ‘சண்டியர்’ என அதே பெயரில் படம் எடுப்பதாக கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார். அன்று கமல் சாதாரண நடிகர், இன்று நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கட்சி தலைவர். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. சாதி, மதம், மொழி சார்பாக இருக்க மாட்டேன் என உறுதிமொழி கூறி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பு ஏற்றுள்ளார்.

சாதிய மோதலை தூண்டக் கூடிய வகையில் அமைந்த பெயர் அது. ‘சண்டியர்’ என்ற பெயரில் படம் தொடங்கப்படக் கூடாது. கமல்ஹாசனிடம் நீங்கள் எடுங்கள், நாங்கள் பின்புலமாக இருக்கிறோம் என யாரோ அவருக்கு சொல்லி இருக்கின்றனர். ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட பெயரை அனுமதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு. ‘சண்டியர்’ பெயரை திரும்ப பெற தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சென்று வலியுறுத்துவேன்.

கமல்ஹாசனை அழைத்து முதல்வர் விஜய் அறிவுரை சொல்ல வேண்டும். அமைதியை சீர் குலைக்கும் முயற்சியாகவே இந்த ‘சண்டியர்’ படம் இருக்கிறது. ‘சண்டியர்’ என்ற பெயர் தாங்கிய படத்தை எடுக்க விடமாட்டோம். சட்ட ரீதியாகவும் போவோம், அனைத்து வழிகளிலும் போராடுவோம். கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும்” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT