கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

 
தமிழகம்

“தவெக உடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தவில்லை” - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி, மகளிர் அணி மாநில துணை செயலாளர் பரிதாநவாப், பாமக மோகன்ராம், பாஜக கவியரசு, தமிழ் மாநில காங்கிரஸ் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்

          

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறிய: ”அதிமுகவை பொறுத்தவரை மிகவும் தெளிவாக இருக்கிறோம். தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. திமுக செய்த தவறை மக்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதால், ஏதோ ஒரு வகையில் வேகமான கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற சித்து விளையாட்டுக்களை திமுக செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சினிமா நடிகர் பற்றி பேசும்போது, அவர் மீது பற்றின் காரணமாக ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசி இருக்கலாம். கட்சியின் தலைவர் என்ன கூறுகிறோரா, அதுதான் எங்களின் வேத வாக்கு.

திமுக செயலற்ற அரசாக உள்ளது. காவேரிப் பட்டணத்தில் நடந்த அசம்பவித நிகழ்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது திமுக ஒன்றிய செயலாளரின் மகன். அவர் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், அடுத்த முறை தவறு செய்வதற்கு முன்வர மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு திமுக அரசு, காவல் துறை பாதுகாப்பு அளிக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தவுடன், கந்திகுப்பத்தில் 200 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெலங்கானாவை சேர்ந்தவர், இங்கே வீடு எடுத்து குடியிருந்து கஞ்சா விற்பனை செய்துள்ளார். இது காவல் துறைக்கு தெரியாமல் இருக்குமா? காவல் துறையின் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருந்தால், ஆட்சியாளர்களின் நிர்பந்தம், திமுக நிர்வாகிகளின் அழுத்தம் இருந்திருக்கும்.

திறமையான காவல் துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திமுக அரசு செயல்படவிடாமல் தடுத்துள்ளது.

பல்வேறு சோதனைகளை தாண்டி அதிமுகவையும், தொண்டர்களையும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து காக்கும் தலைவராக பழனிசாமி உள்ளார். ஒபிஎஸ் அதர்மம், இபிஎஸ் தர்மம். அதர்மத்தின் கூட்டணி திமுக. தர்மத்தின் கூட்டணி அதிமுக. மீண்டும் தமிழக முதல்வராக அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பொறுப்பு ஏற்பார்” என்று என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT