நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலதுணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 
தமிழகம்

“ஓபிஎஸ்ஸை சேர்க்காதது இபிஎஸ் எடுத்த சரியான முடிவு” - கே.பி.ராமலிங்கம் சர்டிஃபிகேட்

செய்திப்பிரிவு

ஓபிஎஸ்ஸை அதிமுக-வில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். சிவாஜியை காட்டிலும் ஓ பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

திருச்சியில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக-வில் பாரம்பரிய நிர்வாகிகளை விட கட்சி மாறி வந்த நிர்வாகிகள் இப்போது அதிகமாக இருக்கிறார்கள்.

          

ராஜகண்ணப்பன், சேகர்பாபு, எ.வ.வேலு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், ஜெகத்ரட்சகன், டி. எம்.செல்வகணபதி, ரகுபதி உள்ளிட்டோர் அதற்கு உதாரணம். மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற பயத்தில் தான் மாற்றுக் கட்சியினரை திமுக இணைத்துக் கொண்டிருக்கிறது. பெரும் விலை கொடுத்து கட்சிகளை கூட்டணியில் சேர்க்கிறது திமுக. இரட்டை இன்ஜின் ஆட்சி முறை தான் தமிழகத்திற்கு தேவை என மக்கள் முடிவெடுத்து விட்டனர். தேசிய தலைமையுடன் இணைந்து நடத்தும் ஆட்சி தான் தமிழகத்துக்கு நன்மை தருவதாக அமையும்.

வட மாநிலங்களில், மத்திய அரசு இயற்றும் சட்டங்களை ஏற்றுக் கொள்ளும் அரசுகள் இருப்பதால் அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முறையற்ற ஆட்சி தமிழகத்தில் நடப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்கு சரியான தீர்வு அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும்.

கூட்டணி வலுவாக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் ஆதரவும் வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு அதிமுக-வுடன் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. எனினும் மக்கள் ஆதரவு இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்தது. அதுபோல் தற்போது திமுக-வுக்கு எதிரான மன நிலையில் மக்கள் உள்ளனர். அதை அறுவடை செய்ய வேண்டும் என்பதால் தான் தவெக தலைவர் விஜய், தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி எனக் கூறுகிறார்.

ஓபிஎஸ்ஸை அதிமுக-வில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். திமுக-வில் ஓபிஎஸ் இணைந்திருப்பதன் மூலம், அதிமுக-வை இத்தனை ஆண்டு காலம் அழிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சிவாஜியை காட்டிலும் மிகப்பெரிய நடிகர் ஓபிஎஸ். திமுக மீது புகார்கள் எழும்போது அதை மடைமாற்றும் விதமாக அரசு செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மார்ச் 15-ம் தேதிக்குள் முடிவுக்கு வரும். எங்களுக்கு எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்தத் தொகுதிகளை அதிமுக-விடம் கேட்போம். எங்களைப் பொறுத்தவரை திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT