அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி

 
தமிழகம்

“இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது” - உதயநிதிக்கு கே.பி.முனுசாமி அறிவுரை

‘முதல்வருக்கும் நாவடக்கம் வேண்டும்’

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “எதிர்க்கட்சிகளை எந்த விதத்திலுமே செயல்படக் கூடாது என்கிற நிலையை முதல்வர் கைவிட வேண்டும்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம் முழுவதும், குறிப்பாக 12 மாவட்டங்களில் எல்-நினோ என்ற இந்த வெப்ப அலையின் காரணமாக விவசாயம் பெரிய அளவிலே பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தின் கீழ் மானாவாரி பயிர்களுக்கும் காப்பீடு நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி, நிலக்கடலை, மக்காசோளம் உள்ளிட்ட மானவாரி பயிர்களுக்கு காப்பீடு திட்டம் குறித்து ஒரு விளம்பரம் கொடுத்துவிட்டு, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பயிர்க் காப்பீடு திட்டத்தை அம்மாநிலத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தி வருகிறார்.

அனைத்து அலுவலர்களையும் நேரடியாக விவசாயிகள் இடத்துக்கு சென்று, ஒரு ஏக்கர் கூட அந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விட்டுவிடக் கூடாது என்பதற்காகத் துரிதமான நடவடிக்கை எடுத்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இதேபோல், தமிழக அரசும் பயிர்க் காப்பீடு திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகளின் காப்பீடு கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

மாவட்டத்தில் ‘மா’ விவசயிகள் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் உதவாமலேயே சென்றுவிட்டார்கள். இந்த ஆட்சியாளர்களாவது செய்வார்களா என பார்த்தால் இவர்களும் செய்யவில்லை. எனவே, நமது விவசாயிகளின் கோரிக்கையான மா-விற்கு கிலோ ரூ.5 மானியம் வழங்கிட, வேளாண் நிதி அறிக்கையில் ரூ.100 ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வருக்கு அனுபவம் இல்லை:

காவிரி நீர் திறப்பில் அரசியல் பேச விரும்பவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ம் தேதி காவிரி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது இயல்பான ஒன்று. அது மழை குறைவாக இருக்கும்பட்சத்தில், போதிய நீர் ஆதாரம் மேட்டூர் அணையில் இல்லை என சொன்னால், அந்த அரசு உடனடியாக கர்நாடக அரசை அணுகியிருக்க வேண்டும் அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்திலே கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தை நாடி, கர்நாடக அரசுக்கு நமது கோரிக்கை சென்று அடைய நடவடிக்கை வேண்டும். ஆனால், நம் முதல்வருக்கு அனுபவம் இல்லாத காரணத்தால், உரிய நேரத்தில் கருத்துகளை சொல்லக்கூடிய அலுவலர்கள் அவருடன் இல்லாததால், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.

முதல்வருக்கும் நாவடக்கம் வேண்டும்:

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வளர்ந்து வரக்கூடிய அரசியல் தலைவர். ஏற்கெனவே ஆட்சியிலும், அதிகாரத்திலும் செயல்பட்டு உள்ளார். பொது மேடைகளில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இந்த இரட்டை அர்த்தங்களைக் கொண்ட வார்த்தைகளை, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பயன்படுத்தவே கூடாது. பண்புடன் பேசி வந்தால் தான் மக்களிடம் மரியாதை கூடும்.

அதே நேரத்தில், உடனடியாக எதிர்க்கட்சிகளை எந்த விதத்திலுமே செயல்படக் கூடாது என்ற நிலையிலே பயமுறுத்துகின்ற வகையிலே இன்றைய முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனை அவர் கைவிட வேண்டும். முதல்வருக்கும் நாவடக்கம் வேண்டும். முதல்வரும் சினிமாவில் கீழே ரசிகர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகச் சில வார்த்தைகளைப் பயன்படுத்தும் அந்த வார்த்தைகளையே, முதல்வரான பின்பும் பயன்படுத்திவிடக் கூடாது.

காவிரியின் வரலாறு தெரியாது...

காவிரி நதிநீர், மேகேதாட்டு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனைகள் கூறியும், முதல்வர் விஜய் யாரையும் மதிக்கவில்லை. தான்தோன்றித்தனமாகத்தானே அவர் செயல்படுகிறார். கர்நாடகவில் அம்மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக உள்ளனர்.

ஆனால், இங்கு நாங்கள் ஒற்றுமையாக வருகிறோம் என கூறினால் கூட, முதல்வர் கேட்க மாட்டேன் என்கிறார். காவிரி பிரச்சனை குறித்து முதல்வர் விஜய், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுவதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்து அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் அகங்காரமான வார்த்தைகளை பேசுகின்றனர்.

காவிரியின் வரலாறு, பிரச்சினைகள் எப்போது உருவாகியது, முன்னாள் முதல்வர்கள் என்னவெல்லாம் போராடினார்கள் என்பது குறித்து நீர்வளத் துறை அமைச்சருக்கு என்ன தெரியும்? அவர் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர்” என்று கே.பி.முனுசாமி கூறினார்.

SCROLL FOR NEXT