கோவில்பட்டி: மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
கோவில்பட்டி கடலைமிட்டாய்கள் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து, சங்கச் செயலாளர் கண்ணன் கூறியதாவது: நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. பேக்கிங் கவர்களின் விலையும் அதிகரித்துள்ளது. 80 கிலோ நிலக்கடலை மூட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9,680 என விற்பனையானது.
தற்போது ரூ.12,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் விலை தற்போது ரூ.2,600 ஆக விலை உயர்ந்துள்ளது.
ஏலக்காய் கிலோ ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்டாய் தயாரிப்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை சமாளிக்க, கடலை மிட்டாய் விலையை, தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.