தமிழகம்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்வு: உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

ரெ.ஜாய்சன்

கோவில்பட்டி: நிலக்கடலை விலை உயர்வு காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை புதன்கிழமை (ஜன.28) முதல் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கார்த்திக் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலக்கடலை விலை உயர்வு காரணமாக கடலை மிட்டாய் விற்பனை விலையை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.

          

இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலை மிட்டாய் தயாரிப்பதற்கு மிகவும் முக்கியமான மூலப்பொருள் நிலக்கடலை தான். சமீபகாலமாக நிலக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ. 8,000 க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில், தற்போது ரூ. 6,500 உயர்ந்து தற்போது ரூ 14,500 - க்கு விற்பனை ஆகிறது. இதனால் கடலை மிட்டாய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஜன.28) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நிலக்கடலை உற்பத்தி குறைவு காரணமாக தான் அதன் விலை உயர்ந்துள்ளது. எனவே நிலக்கடலை உற்பத்தியை விவசாயிகள் அதிக அளவு செய்யும் வகையில் தமிழக அரசு அவர்களை ஊக்குவித்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலக்கடலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய தேவைக்கு போக இருப்பதை மட்டும் ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தான் புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஊர்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரை பயன்படுத்தி, கடலை மிட்டாய் தயாரித்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கோவில்பட்டியில் தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.160 முதல் ரூ.180 வரை மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீத உயர்வினால் இனி ரூ. 220 வரை விற்பனை செய்யப்படும்.

அதேபோன்று சில்லறை விலையில், தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.200 முதல் ரூ. 220 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், 40 சதவீதம் விலை உயர்வினால் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.260 வரை விற்பனை செய்யப்படும் என்று கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT