முதல் இடத்தைப் பிடித்த கோவை சூர்யாவுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறும் மலேசியா நிஷா (2-ம் இடம் பெற்றவர்) புதுச்சேரி அனன்யா (3-ம் இடம் பெற்றவர்).

 
தமிழகம்

‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை வென்றார் ‘கோவை சூர்யா’ - மலேசியா நிஷா 2-ம் இடம்

புதுச்சேரி அனன்யா 3-ம் இடம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தென்னிந்தியர் திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் ‘மிஸ் கூவாகம் - 2026’ நிகழ்ச்சி விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று இரவு நடைபெற்றது. ஆதினங்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத் தலைவி விமலா வரவேற்றார். மறைந்த மூத்த திருநங்கை ராதா அம்மாளுக்கு ஒரு நிமிடம் மவுனஞ்சலி செலுத்தப்பட்டது. திருநங்கைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடகர் வேல்முருகன் பாடல்களை பாட, மேடை மற்றும் விழா அரங்கில் திரண்டிருந்த திருநங்கைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அரசு பணி உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த திருநங்கைகள், இளம் சாதனையாளர்களுக்கு நடிகர் மகேந்திரன், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்டோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

இதைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் போட்டி தொடங்கியது. 15 திருநங்கைகள் பங்கேற்றனர். தலையில் பூச்சூடியும், நெத்திச்சுட்டி அணிந்தும், பட்டு புடவை உடுத்தியும், நாகரிக ஆடை அணிந்தும் பங்கேற்றனர்.

இவர்களில் 7 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப் பட்டனர். இவர்களிடம் சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளை நடுவர்கள் எழுப்பினர். இதில் சிறப்பாக பதிலளித்த 3 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடந்த ‘மிஸ் கூவாகம் - 2026’ அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றில் கண்கவர் ஆடைகளுடன் ஒய்யாரமாக வலம் வந்த திருநங்கைகள்.

முன்னதாக இந்நிகழ்வில் மேலமங்கலம் சுவாமிகள், சைலாபுரி திருமடத்தின் ஆதினம் பேசும்போது, “சமுதாயத்தில் திருநங்கைகள் மீதான பார்வை முன்பு மாறுபட்டு இருந்தது. இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

திருநங்கைகளின் வாழ்க்கைத்தரத்தை குருமார்கள் மாற்றி இருக்கின்றனர். இவர்களை கீழ் நிலையில் இருந்து, உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் வாழ்க்கைத்தரத்தை இறை நெறிப்படுத்தி, ஒழுங்கு நெறிப்படுத்தி வாழ வேண்டும்.

உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்தனர். ‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை கோவையைச் சேர்ந்த சூர்யா தட்டிச் சென்றார். இவருக்கு ரூ.51 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை மலேசியாவை சேர்ந்த நிஷா பிடித்தார்.

இவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை புதுச்சேரியைச் சேர்ந்த அனன்யா பெற்றார். இவருக்கு ரூ.11 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மூன்று பேருக்கும் கிரீடம் மற்றும் பரிசுத்தொகையை நடிகர்கள் பாலா, மகேந்திரன், நடிகை ஷனம் ஆகியோர் வழங்கினர். முன்னதாக வேலூரைச் சேர்ந்த பூஜா உட்பட 10 பேருக்கு நிதி உதவியை நடிகர் கேஒய்பி பாலா வழங்கினார்.

திருநங்கைகளின் கூட் டமைப்புத் தலைவர் மோக னாம்பாள், துணைத் தலைவர் நூரி, விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று திருநங்கைகளை வாழ்த்திப் பேசினர்.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள், இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT