கடலூர் கேப்பர்மலை அருகில் உள்ள கொண்டங்கி ஏரி பராமரிப்பின்றி காணப்படுகிறது.

 
தமிழகம்

பராமரிப்பின்றி வீணாகும் கொண்டங்கி ஏரி... கடலூரின் முக்கிய நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுமா?

ம.வீரவேல்

கடலூர்: கடலூரின் முக்கிய நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரியை முறையாக பரா மரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாநகர் அருகில் கேப்பர்மலை அடிவாரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டங்கி ஏரி உள்ளது.

மூன்று பக்கமும் மலைப்பகுதி சூழ்ந்து இயற்கையான சூழலில் 188 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், 18.72 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். மலையடிவாரத்தில் இருப்பதால் கேப்பர்மலை பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஏரியில் சங்கமிக்கிறது. இந்த ஏரியின் மேற்கு பகுதி மேல் ஏரி எனவும், கிழக்கு பகுதி கீழ் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது.

கடலூர் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இந்த ஏரி நீரை பயன்படுத்தலாம் என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. 1870 மற்றும் 1880-ல் கடலூர் மாவட்ட மருத்துவ அலுவலராக இருந்த மேஜர் ஜி.ராபர்ட்சன் என்பவர் தான் இத்திட்டத்தை உருவாக்கியவர். சென்னை மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட பழமையான குடிநீர் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதன்பின் கடந்த 2000-வது ஆண்டில் கேப்பர்மலை பகுதியில் ஏரிக்கு அருகில் ரூ. 6 கோடி செலவில் ஏழு போர்வெல்கள் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், திருவந் திபுரம் உட்பட கடலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியை முறையாக பராமரிக் காததால் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்துபோய் வருகிறது. ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.

மழை பெய்து ஏரியில் நீர் நிரம்பினால் 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மதகுகள் முறையாக பராமரிப்பில்லாத காரணத்தால் ஏரியில் உள்ள நீர் வெளியேறி வீணாகி விடுகிறது. இதனால் முக்கிய நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி உபயோகமின்றி காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கு அருகே கேப்பர்மலையில் போர்வெல் கள் அமைக்கப்பட்டு, கடலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

நாளடைவில் குடிநீரின் தரம் குறைந்து, சுத்திகரிப்பு அமைப்பும் முறையாக பராமரிப்பின்றி உள்ளதால் விநியோகம் செய்யப்படும் நீர் தரமானதாக இல்லை. எனவே மக்கள் குடிப்பதற்கு காசு கொடுத்து குடிநீரை வாங்கும் நிலை உள்ளது. ஏரியை முழுமையாக அளவீடு செய்து, தூர்வார வேண்டும்.

இதன்மூலம் ஏரியின் நீர்பிடிப்பு அதிகரிக்கும். சுத்திகரிப்பு முறை யையும் மேம்படுத்தி தரமான குடிநீரை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்குள் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும்.

ஏரியை ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்கும் நிரந்தர திட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்றனர். கடலூரின் இயற்கைச் சொத்தாக விளங்கும் கொண்டங்கி ஏரியை முறையாக பராமரித்தால் குடிநீர் ஆதாரம், பாசன வசதி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு ஆகிய அனைத்திற்கும் ஒரே தீர்வாக அமையும்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், சம்பந்தப்பட்ட துறைகளும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்து கொண்டங்கி ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

சுற்றுலாத் தலமாக்கினால் வருவாய்க்கு வழி

மாநகரின் அருகிலேயே அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியின் கரைகளை முறையாக பராமரித்து நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டு மையம் போன்றவற்றை ஏற்படுத்தினால் பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கிய மையமாக இருக்கும்.

பறவைகள் மற்றும் உயிரினங்களின் வாழ்விடமாக கொண்டங்கி ஏரியை மேம்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயிரினப்பன்மையும் அதிகரிக்கும். அதன்மூலம் படகு சவாரி, பார்வைக் கோபுரம், பறவைகள் பார்வை மையம் போன்ற சுற்றுலா வசதிகளை உருவாக்கினால் கடலூரின் புதிய சுற்றுலா அடையாளமாக கொண்டங்கி ஏரி திகழ்வதோடு, மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

SCROLL FOR NEXT