சென்னை: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்குச் சட்டப்பேரவைச் செயலகம் தகவல் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய், திருச்சிகிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இதனால், திருச்சி கிழக்கு தொகுதிகாலியானது.
இதேபோல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயகுமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனால், இந்த 7 தொகுதிகளும் காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிப்பு வெளியிட்டது. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு நீதிமன்ற வழக்கு காரணமாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலகம் தகவல் அனுப்பியுள்ளது. இதனால் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டார்.
இதில் அவர் 82,997 வாக்குகளையும், ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் வி.எஸ்.பாபு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.