ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி, காவலாளியை கொலை செய்த ஒரு கும்பல், பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சயான் உள்பட பத்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும், குற்றவாளிகள் தரப்பில் சயான், உதயகுமார் ஆகியோரும் ஆஜராகினர். வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதி முரளிதரன் கேட்டறிந்தார். அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் காமேஸ்வரன் விசாரணை நிலை குறித்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, விசாரணையை வரும் செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.