திண்டுக்கல்: 63-வது மலர் கண்காட்சிக்காக, கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் முதல் கட்டமாக பல வகையான மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணிகள் இன்று (டிச.12) காலை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவில் ஆண்டு முழுவதும் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன. இதை பார்த்து ரசிக்க ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
2026-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முதல் கட்டமாக சால்வியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டமன் போன்ற மலர்ச்செடிகளை நடும் பணி இன்று (டிச.12) காலை தொடங்கப்பட்டது. இப்பணியை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் பிரபு, தோட்டக்கலை அலுவலர் அரவிந்த மற்றும் பூங்கா ஊழியர்கள் கலந்து கொண்டனர். 63-வது மலர்க் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் , இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், ஆன்டிரைனம், வயோலா, அல்ஸ்ட்ரோமேரியா உள்பட 75 வகையான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.
இதற்காக, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விதைகள் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்து, பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 2.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதே போல், மலர்க்காட்சி மாடம், கண்ணாடி மாளிகை மற்றும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 10,000 வண்ண மலர்ச்செடி தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட உள்ளன என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.