மு.வீரபாண்டியன்
கும்பகோணம்: சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அக்கறையைத் தவிர, எங்களுக்கு வேறு அக்கரை தெரியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கும்பகோணத்தை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
என்எல்சியின் 3 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை ஏற்க முடியாது. இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (ஜூன் 29) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை, எங்களுக்கு இக்கரையும் தெரியாது, அக்கரையும் தெரியாது. ஆனால், எங்களுக்கு ஒரு அக்கறைதான் இருக்கிறது.
அந்த அக்கறை முதலாளித்துவ சமூகத்தில் இருந்து அனைவருக்குமானதாக சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக கட்சிகள் இணையலாம், ஒன்று சேர்ந்து போராடலாம். ஆனால், பாஜகவுடன் அதிமுக சேரக் கூடாது என்றுதான் நாங்கள் சொல்லுகிறோம். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தமிழரை தேர்வு செய்ய வேண்டும்.