தமிழகம்

“சுந்தர்.சி-யின் வருகை ஒரு ‘படித்த’ அரசியல்வாதியை நடுங்க வைத்துள்ளது” - குஷ்பு விமர்சனம்

டெக்ஸ்டர்

சென்னை: சுந்தர்.சி அரசியலுக்கு வந்ததைக் கண்டு ஒரு 'படித்த' அரசியல்வாதி நிலைகுலைந்து போயிருப்பது பல விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து குஷ்பு தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியுள்ளதாவது: “ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் சுந்தர்.சி ஏற்படுத்தியுள்ள அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. மீனாட்சி அம்மன் ஆசி எங்களுடன் இருக்கிறது.

          

சுந்தர்.சி அரசியலுக்கு வந்ததைக் கண்டு ஒரு 'படித்த' அரசியல்வாதி நடுங்கிப் போயிருப்பது பல விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் புதிய நீதிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சுந்தர்.சி, மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர்கள் அவரை ஒரு வெளி ஆள் என்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில், நாம் இன்று சொந்தம் என்று கொண்டாடும் இடங்களுக்கு ஒரு அந்நியராகத் தானே வந்திருப்போம்? பிறப்பு நம்மை வரையறுப்பதில்லை, நாம் அந்த இடத்தோடு கொண்டிருக்கும் பிணைப்புதான் நம்மை வரையறுக்கிறது.

நமது பூர்வீகம் முக்கியமல்ல, நமது அர்ப்பணிப்புதான் முக்கியம். சுந்தர் சி ஒரு வெளிஆள் அல்ல. அவர் தமிழ்நாட்டின் மகன். இந்த மண்ணில் வாழ்ந்து, உழைத்து, மக்களோடு ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பவர். அவர் மூச்சும் தமிழே, அவர் தமிழ்ப் பண்பாட்டிற்காக நிற்பவர், அதன் எதிர்காலத்தை நம்புபவர்.

ஒருவேளை, அரசியலும் அரசியல்வாதிகளும் இத்தகைய குறுகிய அடையாளங்களையும் பிரிவினைகளையும் கடந்து உயர முடியுமா என்பதுதான் உண்மையான கேள்வி. மதுரை என்பது அன்பு, உபசரிப்பு மற்றும் அரவணைப்பிற்கானது என்று சொல்வார்கள். உண்மையிலேயே சேவை செய்யவும், தங்களில் ஒருவராக இருக்கவும் விரும்பும் ஒருவரை மதுரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும்" இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT