ஓ.பன்னீர்செல்வத்தை நினைத்தால் பாவமாக உள்ளது என்றும், தன்னை கூட்டணியில் யாராவது சேர்த்துக்கொள்வார்களா என முயற்சித்து வருகிறார் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுடன் தேமுதிக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அது அவர்களின் விருப்பம். விஜயகாந்த் உயிருடன் இருக்கும் வரை, திமுக உடன் கூட்டணி அமைத்ததே கிடையாது. தற்போது அவர்கள் கூட்டணி அமைத்து உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை நினைத்தால் பாவமாக உள்ளது. தன்னை யாராவது கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று முயற்சித்து வருகிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார். திமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. இவர்கள் எப்படி மாதம் தோறும் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கப் போகிறார்கள்? பொய் சொல்லலாம். ஆனால் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லக்கூடாது. தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு முறையும், திமுக இதை தான் செய்து கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்திலே வாகனங்கள், பணம், டிவி, லேப்டாப் பொது வெளியில் வைத்து கொடுக்கின்றனர். காவல்துறை இதனை கண்டுகொள்ளவில்லை. திமுகவுடன் காங்கிரஸ் உறுதியாக கூட்டணியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இரு கட்சிக்கு இடையே தொடர்ந்து பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யும், காங்கிரஸுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டுள்ளது.
எங்கள் பாஜக கூட்டணியில், தொகுதி பங்கீடுகள், பேச்சு வார்த்தைகளுக்கு பின்பு அறிவிக்கப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறது. எனவே அவசரம் இல்லை. கூட்டணிக்குள் எத்தனை தொகுதி எந்தெந்த தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை.
அதன் பிறகு தான், நான் போட்டியிடுகிறேனா இல்லையா என்பதை சொல்ல முடியும். எங்களுக்கு சீட்டு வழங்கினால்தான் வேலை செய்வோம் என்பது கிடையாது. பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த ஒரு நோக்கம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.