சென்னை: தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத நிலையில், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸுக்கு விசிகவில் முக்கிய பொறுப்பு வழங்கி திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இருவரும் விசிகவின் துணை பொதுச் செயலாளர்களாக இருந்த நிலையில், தற்போது ஆளூர் ஷாநவாஸை மாநில முதன்மைச் செயலாளராகவும், எஸ்.எஸ்.பாலாஜியை பொருளாளராகவும் நியமனம் செய்து கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், விசிகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கொடுக்கவில்லை.
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கட்சிக்குளேயும், வெளியேவும் பல விதமாக கருத்துகள் வெளிப்பட்டன. குறிப்பாக, ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நேரடியாக பேசி சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கேட்டதாக விசிகவினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனை, திருமாவளவனும் ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.
அதுமட்டுமின்றி, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அறிமுக கூட்டத்துக்கு அவர்கள் வரவில்லை என்பதால் அதுவும் பேசு பொருளானது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எஸ்.பாலாஜியும், ஆளூர் ஷாநவாஸும் விளக்கம் அளித்தனர்.
அதன் பின்னர். இருவரும் மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆளூர் ஷாநவாஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். எஸ்.எஸ்.பாலாஜி தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், விசிகவில் இவர்கள் இருவருக்கும் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.