கேசவ விநாயகம்
சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘சத்பாவ்’ (சமுதாய நல்லெண்ணம்) எனும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள தகவல்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த கேசவ விநாயகன், இனி தமிழகம் முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிய கேசவ விநாயகன், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்துகளையும் வழிகாட்டல்களையும் பாஜகவுக்குள் கொண்டு செல்வதிலும், இரு அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதிலும் அதிகார மையமாக இருந்து முக்கியப் பங்காற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்ணாமலை உள்ளிட்டோர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், புகார்கள் காரணமாகவும் அவரை கட்சிப் பதவியில் இருந்து விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தவும், புதிய உத்திகளை வகுக்கவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.